இன்க்ளூசிவ் நியூஸ்ரூம்ஸ் - ஒரு புதிய தொடக்கம்

பால்புதுமையினர் (LGBTQIA+) குறித்தச் செய்திகளை, இந்திய ஊடகங்கள் பொறுப்புடனும் துல்லியமாகவும் வெளியிட உதவும் ஒரு முன்னெடுப்பு.

24 பிப்ரவரி 2023: காலம் காலமாக பெரும்பாலான இந்தியச் செய்தி ஊடகங்கள் பால்புதுமையினர் பற்றிய செய்திகளை வெளியிடுவதில்லை. வெளியாகும் சில செய்திகளிலும் பால்புதுமையினரின் அடையாளங்கள், கதைகள் மற்றும் பிரச்சினைகள் தவறாகவும் திரித்தும் எழுதப்படுகின்றன. ஊடகங்களின் செய்தியாக்கம் எங்களைப் புறக்கணிக்கிறது. ஊடகங்களும் ஊடகங்களில் பணிபுரிபவர்களும் பயன்படுத்தும் மொழி எங்களை மனிதர்களாகவே கருதுவதில்லை. பால்புதுமையினரைப் பற்றி அரிதாக வரும் செய்திகள் கூட வானவில் சுயமரியாதைப் பேரணி அல்லது நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட நிகழ்வுகளைப் பற்றியதாகவோ பால்புதுமையினருக்கு எதிரான வன்முறையை நுகர்வுத்தன்மையுடன் சித்தரிப்பதாகவோ இருக்கின்றன. எந்த மொழியாக இருந்தாலும் செய்தி ஊடகங்களில் சிஸ் தன்மை கொண்ட எதிர்பாலீர்ப்பினர் அதிகமாக இருப்பதும் இதற்கு ஒரு காரணம். குறிப்பாக எந்த செய்தி எப்படிப்பட்ட கோணத்தில் வரவேண்டும், யாருடைய குரல் கேட்கவேண்டும் என்று முடிவெடுக்கும் செய்தி ஊடகத் தலைவர்களும் சிஸ் எதிர்பாலீர்ப்பினராகவே இருக்கின்றனர். செய்தி ஊடக அலுவலங்களில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாததால் பால்புதுமையினரைப் பற்றி வெளியிடப்படும் செய்திகள் குறைவாகவும் உணர்வற்றவையாகவும் இருக்கின்றன.

இந்திய ஊடகச் சூழலில் பால்புதுமையினர் மற்றும் அவர்களது அடையாளங்கள் குறித்தப் புரிந்துணர்வை ஏற்படுத்தி பால்புதுமையினரை உள்ளடக்கியச் செய்திகளைக் கொண்டு வர உதவும் வகையில், த நியூஸ் மினிட், குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் மற்றும் குயர் பீட் ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து இன்க்ளூசிவ் நியூஸ்ரூம்ஸ் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளன. கூகுள் நியூஸ் இனிஷியேட்டிவ் இந்தத் திட்டத்துக்கு உறுதுணையாக இருக்கிறது.

த நியூஸ் மினிட் நிறுவனத்தின் சிறப்புத் திட்டம் மற்றும் பரிசோதனை முயற்சிகள் பிரிவின் ஆசிரியர் ராகமாலிகா கார்த்திகேயன் இது குறித்துப் பேசும்போது, “எங்களைப் பற்றிய செய்திகள் அதீத வன்முறையுடனும் வேடிக்கைப் பார்க்கும் தன்மையுடனும் இருப்பதே வழக்கமாக இருக்கிறது. அதிலிருந்து ஊடகங்களை மாற்றி எங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதையுடன் செய்திகளை வெளியிடச் செய்ய ஒரு பால்புதுமையினர் குழு எடுத்துருக்கும் முயற்சி இது. இதில் பங்கெடுக்கும் பலரும் எழுத்தாளர்களாகவும் ஊடகவியலாளராகவும் இருக்கிறோம். எங்களின் மீதான சமூகத்தின் பார்வை, எங்கள் பிரச்சினைகளை அணுகும் விதம் ஆகியவற்றை மாற்ற எங்களது சொந்த வாழ்விலும் பணிச்சூழலிலும் முயற்சிகள் எடுத்து வருகிறோம். அது மட்டுமல்லாமல், தங்களது அடையாளத்தை மறைத்துக்கொண்டால் தான் ஊடகவியலாளராக மதிக்கப்படுவோம் என்கிற நெருக்கடிக்குக் பால்புதுமையினர் ஆளாகாதபடி ஊடகத்துறையும் மாறவேண்டும், அதுவும் எங்கள் விருப்பம்” என்று கூறினார்.

2023ம் ஆண்டில் வெவ்வேறு படிநிலைகளில் இன்க்ளூசிவ் நியூஸ்ரூம்ஸ் அமைப்பின் செயல்பாடுகள் இருக்கும். முதலில் த நியூஸ் மினிட் மற்றும் குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் ஆகிய இரு அமைப்புகள் ஏற்கனவே இணைந்து உருவாக்கிய தமிழ் மற்றும் ஆங்கில பால்புதுப் பதங்களின் விளக்கக் கையேடானது மலையாளம், இந்தி, மராத்தி மற்றும் கன்னட மொழிகளிலும் உருவாக்கப்படும். அடுத்த கட்டமாக ஆங்கிலம், தமிழ், மலையாளம், இந்தி, மராத்தி மற்றும் கன்னட மொழிகளில் பால்புதுமையினர் ஊடகக் கையேடு உருவாக்கப்படும். ஊடகப் பண்புகளைப் பேணும் அதே நேரத்தில் பால்புதுமையினர் பற்றிய செய்திகளை மரியாதையுடனும் துல்லியத்துடனும் எப்படி வெளியிடுவது என்று ஊடகவியலாளர்கள் அறிந்துகொள்ள பால்புதுப் பதங்களின் விளக்கக் கையேடு உதவியாக இருக்கும்.

இதைப் பற்றிப் பேசிய குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸின் இணை நிறுவனர் மௌலி, “தமிழில் பால்புதுப் பதங்களை சேகரித்து வரிசைப்படுத்துவதை குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸின் முக்கியமான ஒரு வேலையாக செய்து வருகிறது. தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவும் வெளிப்படுத்திக் கொள்ளவும் பால்புதுமையினர் பயன்படுத்தும் சரியான பதங்களை ஊடகவியலாளர்களுக்குத் தெரியப்படுத்துவதே இதன் மைய நோக்கம். ஊடகக் கையேட்டை நாங்கள் உருவாக்கத் தொடங்கியபோது, நமக்குள் இருக்கும் பலதரப்பட்ட அடையாளங்கள், வெவ்வேறு மொழிகளின் சமகாலத் தேவைகள் ஆகியவையும் அதில் வெளிப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றித் தரும் மொழிபெயர்ப்பாக மட்டுமே இது இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். அந்த மொழியைப் பேசும் பால்புதுமையினரின் மொழியியல் மற்றும் கலாச்சாரக் கோணங்களிலிருந்தும் இந்த சொற்கள் உருவாக்கப்பட்டன” என்று தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கூடுதல் உதவியாக, இன்க்ளூசிவ் நியூஸ்ரூம்ஸ் அமைப்பின் மூலம்  செய்தியாளர்கள், தொகுப்பாசிரியர்கள் மற்றும் செய்தி ஊடகத்தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு பயிலரங்குகள் நடத்தப்படும். வெவ்வேறு மொழிகளில் பால்புதுமையினர் பற்றிய செய்திகளை எப்படி வழங்குவது என்பது பயிற்றுவிக்கப்படும்.

அது மட்டுமல்லாமல், பால்புதுமையினரின் பிரச்சனைகளை அணுகுவதில் ஆர்வம் உள்ள ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் ஒரு திட்டமும் முன்னெடுக்கப்படும். இந்தப் பிரச்சனைகளை சரியான முறையில் அணுவது பற்றி அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும். 

குயர் பீட் அமைப்பின் நிறுவனரும் ஆசிரியருமான அங்குர் பலிவால் பேசும்போது, “பத விளக்கப் பட்டியல், ஊடகக் கையேடு, பயிலரங்குகள் ஆகிய எல்லாமே, பால்புதுமையினர் தங்களை எப்படிப் பார்க்கிறார்களோ ஊடகங்களும் அப்படியே அவர்களை அணுகுவதற்கான ஆற்றலைத் தரும். இவற்றின் மூலம் பொதுச்சமூகத்தில் சில விவாதங்கள் தொடங்கும் என்றும், பால்புதுமையினரை சமமாக பாவிக்கும் வெளிகள் பரவலாக உருவாகும் எனவும் நம்புகிறோம்” என்றார்.